பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழைப்பில் ஈடுபட்டால்தான் ஒப்புரவு நெறி தோன்றும்; வளரும்; நிலைத்து நிற்கும்.

ஒப்புரவு நெறியில் இறுக்கமான தனியுடைமை உணர்வு இல்லை என்பதே சிறப்பு. அதேபோழ்து உரிய கடமைகளைப் பொறுப்புணர்வுடன் செய்யாது உரிமைகளை அனுபவிக்க ஆசைப்படவோ அனுபவிக்கவோ கூடாது. இன்று சோவியத் அடைந்துள்ள தீய அனுபவங்களையும் நமது நாட்டு மக்களின் வாழ்க்கை முறையில் அடைந்துவந்துள்ள தீமைகளையும் எண்ணுக. எழுத்தறிவில்லாதார் 77 சதவிகிதம்! வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் 58.9 சதவிகிதம். பல நூறாயிரம் பேர் வேலையில்லாமல் தவிப்பு! முடிவாக விளைந்த தீமை பணத்தின் மதிப்பு வீழ்ச்சி!

வாழும் நாள்கள் சில! ஏன் குற்றங்களைச் சுமந்து கொண்டு சோம்பித் திரிந்து வாழ்தல் வேண்டும்? வாய்ப்பேச்சு சோறு போடுமா? படைப்புப் பல படைப்போம்! கூடித் தொழில் செய்வோம்! கூடி உண்போம்! கூடி வாழ்வோம்! எல்லாருக்கும் எல்லாம் என்ற திசைநோக்கி நகர்த்துவோம்! புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! இதுவே மனித குலத்தின் நல்வாழ்வுக்குரிய ஒப்புரவு நெறி.