பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

45


அறிவாகும். கற்றல் கேட்டலின் மூலம் பெற்ற அறிவுக்கு மறதி நேரலாம். நினைப்பில் தோன்றிய அறிவுக்கு மறதியில்லை.

அதுமட்டுமா? கற்றல்-கேட்டலின் வழிப் பெற்ற, அறிவையும் நினைவு உயிர்க்கு நிலையானதாகச் செய்யும். உற்றுழி உதவச் செய்வதும் இந்த நினைவேயாம். சிலர் நிறையப் படித்திருப்பார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரெனத் தடவுவார்கள்_தட்டுத் தடுமாறுவார்கள்; தலையைச் சொறிவார்கள்; உதட்டைக் கடிப்பார்கள்; கையை உதறுவார்கள். தம்மில் எளியார் யாராவது பக்கத்திலிருந்தால் எரிந்து விழுவார்கள். இவ்வளவு அலங்கோலமும் எப்பொழுது? நினைவு கைகொடுக்காத பொழுது!

மேலும் நினைவுப் பண்பு நன்றியோடு தொடர்பு உடையது. அது போலவே சில சமயங்களில் தீமையோடும் தொடர்புடையது. ஏன்? தெளிவாகச் சொன்னால் நினைவு நல்ல வழியில் இயங்கும் பொழுது, நன்றி, பண்பாடு, சான்றாண்மை என்ற நன்னெறிகளில் படர்கிறது. அதுவே நெறியில்லா நெறியில் படருமானால் வன்கண்மை, கயமை ஆகிய புன்னெறிகளில் படர்ந்து தன்னையுடைய மனிதனை இம்மையோடன்றி, எழுமையும் நின்று அழிக்கின்றது.

மனம், வாழ்க்கையின் மையம். ஆம்! உடல் பெரியது தான்; கண்ணுக்குத் தெரியக்கூடியதுதான்; கால்கள் நடக் கின்றன; கைகள் செய்கின்றன; கண்கள் பார்க்கின்றன; வாய் பேசுகிறது. ஆயினும், சுதந்திரமாகவா? அவ்வவற்றின் விருப்பத்தின் அடிப்படையிலா? இல்லை, இல்லை! உள் நின்று இயக்குவது மனமே!

மனம் உயிரின் மிகச் சிறந்த கருவி. ஆனாலும், உயிர், மனத்தை எடுத்துப் பயன்படுத்துவதைப் பொறுத்திருக்கிறது. மனம் உயிரின் நல்வளர்ச்சிக்கும் துணை செய்யலாம்; வீழ்ச்சிக்கும் துணை செய்யலாம்; 'மனம் போல வாழ்வு'