பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புலமையுடையவன் மட்டுமல்ல; எழுதத் தெரிந்தவன் மட்டுமல்ல. புலன்களில் அழுக்கற்றவனாக இருக்க வேண்டும். இன்று பொறிகளிலேயே அழுக்கைச் சுமந்து திரிபவர் பலர், இலக்கியக் கர்த்தாக்கள் ஆகிவிட்டனர். இந்தக் கொடுமை அவ்வளவு பெரிதல்ல. பொறிகளில் அழுக்கு வெளிப்படையானது.

ஆனால், பொறிகளில் தூய்மை காட்டிப் புலன்களின் அழுக்கைச் சுமந்து நடமாடுவோரை நல்ல இலக்கியப் படைப்பாளர்கள் என்று கூறுவது இழுக்கேயாம். ஆதலால், படித்தற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்குமுன் அந்த நூலின் படைப்பாளனைப் பற்றியும் அறிந்துகொள்வது நல்லது. இது பொதுவிதி.

ஆனால், நாற்றமுள்ள நத்தையிலிருந்து முத்துப் பிறக்க வில்லையா? தமது நிலையை இயல்பில் உணர்ந்து கழிவிரக்கம் கொண்டு வளர்ந்து உய்ய வேண்டும் என்ற பேரார்வத்தில் இலக்கியம் செய்யும் சிந்தனையாளர்களும் உண்டு. அவர்களுடைய வாழ்க்கை நமக்குப் படிப்பினையல்ல. அவர்கள் படைத்த இலக்கியங்களே நமக்குப் படிப்பினை.

உதாரணமாகத் தமிழகத்தில் அருணகிரிநாதரை எடுத்துக்கொள்ளலாம். திருப்புகழ் பாடத் தொடங்கிய அருணகிரிநாதரின் முன்னைய வாழ்க்கை, இரங்கத்தக்க வாழ்க்கையே! ஆனாலும், தமது இரங்கத்தக்க நிலையை அவர் உணர்ந்ததைப் போல வேறு யாரும் உணரவில்லை. இத்தகையோர் படைப்பு, சிறப்பு விதி.

நூல்களைப் படித்தலைவிட, படித்தற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலே வாழ்நாளில் பாதி முடிந்து விடுகிறது என்பார் ரஸ்கின், நூல்களைப் படித்தலும் தேர்ந்தெடுத்தலும் ஒரே வகையா?