பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

53


நிறைய நூல்களைப் படிக்கும் வழக்கமுடைய பிஃரான்சிஸ் பேக்கன் "பல நூல்கள் படிக்க!” என்றார்; "சில நூல்கள் படித்து மகிழ!” என்றார்: "மிகச் சில நூல்களே படித்துச் சீரணித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகத் தக்கன” என்றார்.

திருவள்ளுவர் படித்தற்குரிய நூல்களைப் பொதுவாக வலியுறுத்தவில்லை. அவர் நூலைப் படிக்கும் மனிதனுடைய தகுதிக்கேற்றவாறு-மனநிலைகளுக்கேற்றவாறு நூல்களைத் தேர்ந்தெடுக்கும்படி வழி காட்டுகிறார். அது என்ன வழி? என்பதை அடுத்து ஆராய்வோம்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.


கற்பதற்குரிய நூல்கள்

நூலாசிரியனாதல் எளிதன்று. பழுத்த மனத்தை உடைய சான்றோர்களே சிறந்த நூலாசிரியராக முடியும். உயர்ந்த நூலாசிரியர்கள் எந்த நாட்டிலும் மலிவான சரக்காக இருக்க முடியாது. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எண்ணிக்கையில் வளர்ந்திருப்பது அறிவினுடைய தர வீழ்ச்சியைத்தான் நினைவூட்டும்.

திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் நூலாசிரியர், கூளப்பநாயக்கனின் காதல் எழுதியவரும் நூலாசிரிய ரென்றால், இது என்ன நியாயம்? திருக்குறளும் ஒரு நூல், கூளப்பநாயக்கனின் காதலும் ஒரு நூலென்றால், அங்ங்னம் சொல்பவரின் அறியாமையை என்னென்பது?