பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒதுபவரின் உள்ளத்தை உருக்கி உயர்த்தும் திருவாசகமும் ஒரு நூல். தீமையைக் கண்டிக்கும் பாவனையில் சிருங்கார ரசத்தையும் சேர்ந்து, ஊடே இரண்டு மூன்று பக்திச் சொற்களையும் சேர்த்தாலே அந்த நூல் பக்தி நூலாகி விட முடியுமா? திருவாசகத்துக்குப் பக்கத்தில் அதை வைத்து எண்ணத்தான் செய்யலாமா?

உணவு, உண்பதில் நாவுக்கினியதா, உடலுக்கினியதா, என்று நன்கு ஆராய்ந்து உடலுக்கினிய உணவையே தேர்ந்தெடுக்க வேண்டும். இயலுமாயின் நாவுக்கும் இனியதாக அமைந்து உடலுக்கும் நலம் பயப்பதாயின் அது முழுமையான நல்ல உணவு.

அதுபோல் கற்க இனிய மொழிநடையும், உயிர்க்கு நலஞ் சேர்க்கும் உயர் கருத்துமுடைய நூல்களாக இருப்பன நல்லவையாம். இத்தகைய பெருஞ் சிறப்புப் பொருந்திய நூல்களுள் தலையாயது திருக்குறள். திருக்குறளை உள்ளவாறு கற்போர் உள்ளம் எப்பொழுதும் தரத்தில் உயருமே தவிரத் தாழாது.

திருக்குறளோடு ஒப்ப வைத்தெண்ணப்படும் நூல்கள் வேறு சிலவும் தமிழில் உண்டு. நம்முடைய சைவ நாயன்மார்கள் அருளிச் செய்த திருமுறைகள் தேனினும் இனிய சுவையுடையன. அறியாமை இருளை அகற்றும் அகல் விளக்காகவும், ஞானப் பேரொளியை வழங்கி வாழ்விக்கும் அருமருந்தாகவும் திகழ்வன.

சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தைப் போன்றதொரு நூல் வேறு எம்மொழியிலும் தோன்றவில்லை. புராணம் என்ற பெயரிருப்பதால் யாரும் அந்த நூலின் சிறப்பினைப் பற்றி ஐயுற வேண்டியதில்லை.

பெரிய புராணத்தில் வருகிற அடியார்கள், தம் வாழ்க்கையில் குறிக்கோள் வைத்துக் கொண்டு போராடியவர்கள். பெரிய புராணம் அன்பின் பிழிவு தொண்டின் சாறு. நூல்முழுதும் திருவருட் பதிவு நிறைந்திருக்கின்றது.