பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கை நிறைந்த அறிவியலின் பாற்பட்டது; நிறைந்த அருளியற் சார்புடையது. வாழ்க்கையின் ஆழத்திற்கும் அகலத்திற்கும் உயர்வுக்கும் எல்லையில்லை. எப்படி இறைவனுடைய அடியும் முடியும் காண முடியாதனவோ, அது போலவே, வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முடிந்த முடிபுமில்லை; வரையறுக்கப் பட்ட ஒரு நிலையுமில்லை.

உலகில் வளமுள்ள குளம், என்றும் பயன்படும்; தூய்மையாக இருக்கும். அதற்கும் அதனைச் சார்ந்தோருக்கும் என்றும் இன்பம் உண்டு. ஏன்? அது புண்ணியத் தீர்த்தமாகவும் ஆகும். ஆனால், ஊற்று வளமில்லாத குளமாக இருக்குமானால் குட்டை என்று பெயர் மாற்றம் பெறும்; துய்மை கெடும்; தொல்லை கொடுக்கும். அதனால் அது துார்த்து மூடப்பெறும்.

அதுபோல மேலும் மேலும் சிந்தனை ஊற்றும், செயல் வளமும் உடையோர் வாழ்க்கை, பயன்பெறும். அத்தகையோர் வாழ்க்கை, பிறந்த இனத்திற்கும், நாட்டிற்கும், பேசும் மொழிக்கும் நிறைந்த பெருமை சேர்க்கும். ஆனால் சிந்தனை செய்யாமல்-சிந்தனை செய்ய மறுத்து, உண்டு உடுத்து வாழும் விலங்கியல் வாழ்க்கை யுடையோரின் வாழ்க்கை அவர்களுக்கும் துன்பம் தரும்; மற்றையோருக்கும் துன்பம் தரும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.