பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்ற முடியும். நேர்மை என்ற சொல்லை நேர்தல் என்ற மூலச் சொல்லின் ஆக்கமாகக் கருதலாம்; அதாவது ஒருவருடைய உணர்வும் இன்ப நலனும் மனித குலத்தின் உணர்வோடு, இன்ப நலனோடு மாறுபாடு கொள்ளாமலும், தீங்கு பயவாமலும் ஒத்து, நேராக விளங்குதலே நேர்மையாகும்.

இத்தகைய நேர்மை மிக்க வாழ்க்கையே சமய வாழ்க்கையினுடைய அடித்தளமாகும். இதனை, அகர எழுத்தை எடுத்துக் காட்டியதன் மூலம் திருவள்ளுவர் விளக்குகிறார். அகர எழுத்து ஒரு பகுதி வளைந்து கிடந்தாலும், வளைந்த வட்டத்தைத் தாண்டி ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. அப்பொழுதே "அ முழுதாக அமைகிறது. அதுபோலவே மனிதன் சார்புகளின் காரண மாக வளைந்து கிடக்கும் வாழ்கையினை நேராக்கிக் கொள்ளுதலை அகரத்தை எடுத்துக் காட்டுதலின் மூலம் விளக்குகிறார். சமுதாயப் பொதுநெறிச் சார்பே சமய நெறி என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

இறைவனை, திருவள்ளுவர் ஐயத்திற்கு இடமின்றிச் சார்பற்ற உலகப் பொதுப் பொருளாகத் தெளிவாகக் காட்ட விரும்புகிறார். ஆதலால்,

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

என்று ஒதுகிறார். இறைவன் வேண்டுதல் இல்லாதவன். அவனுக்கு இன்ன சாதி பிடிக்கும் என்பதும் அவனுக்கு இன்ன மொழி பிடிக்குமென்பதும், அவனுக்கு இன்ன சோறு பிடிக்குமென்பதும், இன்னதைக் கொடுத்தால் இன்னது தருவான் என்பதும் பொய்ம்மை; மனிதர் செய்து வைத்த சூது. அவன் எல்லாவற்றையும் கடந்தவன். வைதாரையும் வாழ வைப்பவன். இதுவே உயர்ந்த சமயம். சமுதாயத்தைத் தழுவி நிற்கும் சமயம். வேண்டுதலும், வேண்டாமையும் உடைய மனிதன் பிரிவினைகளை விரும்புவான்;