பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

61


வேற்றுமையை விழைவான்; பொல்லாத வேற்றுமைக்குப் போலிக்காரணங்கள் கூறி நியாயம் காட்டுவான், சமயம் எல்லாவித வேற்றுமைகளையும் கடந்தது. மனித உலகத்தின் ஈடேற்றமே சமயத்தின் இலட்சியம். சமயம் சமுதாயப் பொது நெறி.

மலர், மணம் பரப்புவது; மனம் உலக உயிர்களின் பொதுமையான நுகர் பொருள். இறைவன் மலர்மிசை மேவுகின்றான். உலகப் பொதுச்சின்னமாக இன்று விளங்கு வது மலரேயாகும். இறைவன் மலரில் மேவுகின்றான் என்பதன் மூலம் சமுதாயத்தைத் தழுவிய சமய நெறியைக் காட்டுகிறார் வள்ளுவர். புறத்தில் கிடக்கும் மலர் மட்டுமல்ல, வாழும் தகுதி படைத்த மனித இனம் அனைத்திற்கும் நெஞ்சுண்டு. ஆனால் நெஞ்சு நெஞ்சாகவா விளங்குகின்றது. கல்லாக, முள்ளாகக் காடாக மேடாகக் களர் நிலமாகவன்றோ நெஞ்சம் விளங்குகின்றது. நெஞ்சம் மலர ஒத்திருக்க வேண்டும். இதில் அன்பு மணம் கமழ வேண்டும். இன்பத்தேன் பிலிற்ற வேண்டும். கருணைக்கசிவு இருக்க வேண்டும்.

இங்ஙனம், நெஞ்சம் மலர வேண்டுமானால், தனிமை அழிந்து தற்செருக்கு ஒழிந்து, ஆங்கு ஒண்டுக் குடித்தனம் செய்யும் பொல்லாங்குகளைச் சுட்டுப் பொசுக்கி, மலரச் செய்ய வேண்டாமா? மலர் உலகப் பொது; உலகுயிர்கள் அனைத்திற்கும் மணம் தருவது. அதுபோல நெஞ்சமென்ற மலர் மலர்க, அந்தத் துரய மனம் என்ற மாளிகையில், இறைவன் எழுந்தருளுவான் என்ற திருக்குறளின் கருத்து, சமுதாயம் தழுவிய சமய நெறியையே காட்டுகிறது. உலகின் பொது நெறியைத் தோற்றுவிக்கும் சமய நெறியே நெறி. கோயிலுக்கும் குடிசைக்கும் இடையே இருக்கும் துரத்தைக் குறைப்பதே சமய நெறி. இத்தகைய சமய நெறியே திருவள்ளுவத்தின் சமய நெறி.