பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போல் நாறுவான். அந்நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். தொல்லை செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வதுபோல, சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.

ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார். இதையே (Volunteer Service) என்று குறிப் பிடுகிறார்கள். குறட்பாவைப் பாருங்கள்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பொருளியல்

திருவள்ளுவர் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கற்பனை உடையவரல்லர். அவருடைய சிந்தனைப் போக்கு வாழ்வியலை ஒட்டியே அமைந்துள்ளது. நடைமுறை உண்மைகளுக்கு அவர் மாறுபட்டவரல்லர். ஆதலால், மனித வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாததாகிய பொருளைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்து இரண்டுபட்ட தன்று; குழப்பமானதுமன்று; மிகமிகத் தெளிவானது; உயர்வானது.

பொருளின் அடித்தளத்திலேயே தனிமனிதனின் வாழ்க்கையையும் சமுதாயத்தின் வாழ்க்கையையும் காட்டுகின்றார். ஏன்? பழந்தமிழ் மரபும் அதுதானே! மனிதன் அடையக் கூடிய பேறுகள் நான்கு என்பது தமிழ்மறை. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அவற்றுள் நடுவனவாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ் நூல் முடிபு.

அதனாலன்றோ திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடு பற்றி அவர்