பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலைதானே! இவர்கள் உடலிச்சையில் வெற்றி கண்டவர்கள் நிறைந்த தவம் செய்தவர்கள்.

ஆனால், மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்கள் மற்றவர்களின் துன்பத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள். யான்னகூட சைவம்தான்! அது புலால் உண்பதில்லை. கள் குடிப்பதில்லை. ஆனாலும் அறிந்தறிந்தும் அது பாகனையே கொல்கிறது. இதனால், தன்னிலை ஒழுக்கம் போதாது என்பதல்ல. தன்னிலை ஒழுக்கத்தின் நிறைவு, பொதுநிலை யொழுக்கத்தில்தான் இருக்கிறது என்பதுதான் உண்மை. தன்னிலை ஒழுக்கம், பொதுநிலைவொழுக்கத்திற்கு வழிவகுக் காது போனால், பயனில்லை.

அதுபோலவே, பொதுநிலை ஒழுக்கம் நிலைபெற வேண்டுமானாலும் தன்னிலை ஒழுக்கமும் தேவை. ஒரோ வழி, பொதுநிலை ஒழுக்கத்தில் வளர்ந்திருந்து தன்னிலை ஒழுக்கத்தில் தவறுகள் இருந்தாலும் தரணி தாங்கிக் கொள்ளும். ஆனால் பொதுநிலை ஒழுக்கத்தில் ஏற்படும் புரை, வேறு ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணமாக அமைகிறது.

திருவள்ளுவர், மனிதனின் தனி வாழ்க்கையிலும் சரி, சமூகப் பொதுநிலை வாழ்க்கையிலும் சரி சிறப்புக்கும் நல்லின்பத்திற்கும் அடிப்படை ஒழுக்கமென்றே கூறுகிறார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்

என்பது குறள்.

உலகியலில் அனைத்துத் துறையிலும் துய்ப்பிற்கு மூலமாய், முதலாய் இருப்பது உயிரே! உயிரில்லையாயின் உடல் தனியே துய்ப்பிற்குத் தகுதியற்றதாகி விடும்; மதிப்பற்ற தாகிவிடும். அஃது ஒரு பிணம். உயிரற்ற உடலால் என்ன பயன்? ஆதலால், வாழ்க்கையின் உண்மை உணர்ந்தோர் உயிரைப் பேணத்துடிப்பதைப்போல உயிர்க்கு உயிராயிருந்து