பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



107


சிலரது உள்ளம் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப் படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்"

(334)
50. “மெய்ப்பொருள் காண்பதறிவு”

இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித் தன்மை பெற்றே விளங்குவன.

மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது. வாழ்வின் துறைதோறும், வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமல் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.

பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை, பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ளவேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு.

சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும். ஆனால் நிலையில்லாதனவாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும். சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு "மெய்” என்று பெயர்.