பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களிலேயே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.

அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைப்பிடித்தல் சிறந்த கல்வி.

மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது - இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை. ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய