பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக்காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ் மாமுனிவர். சைவசமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

புரட்சித்துறவி

சிந்தனையாளர்

நூலாசிரியர்

சொற்பொழிவாளர்

நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ் வழிபாடு, ஆட்சி மொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும்,