பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

உடல், ஒரு உழைப்புச் சாதனம்-கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் - நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்து விடும்.

மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையகத்திற்கு அணியாக வாழ்வோம்!

57. முப்பால் அமைந்த திறன்

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை. பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional thinking-Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லாரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் ‘ஊழிய’லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்திக்கின்றார்; ஆழமாகச் சிந்திக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை