பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோழைத்தனம் வேண்டாம்-முதலில் கருத்துச் சரியா தவறா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர் பேசுகின்றார்.

திருவள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே நிறையப் பேர் கருத்துக் கடை விரித்தார்கள். தமிழகத்திற்குச் சமணர்கள் வந்தார்கள் - பெளத்தர்கள் - மாயாவாதிகள் வந்தார்கள். இந்தப் பல்வேறு சமயவாதிகளும் இந்த நாட்டில் கருத்துக் கடைகளை விரித்துத் தமிழர்களைத் தங்கள் வலையில் இழுக்க முயன்றார்கள். இதைப் பார்த்துத்தான் திருவள்ளுவர், கடை யாருடையது என்றோ, கடையில் யார் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ கவலைப்படாதீர்கள் - கடையில் விற்கப்பெறும் சரக்கின் தரத்தைப் பாருங்கள் என்றார். சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பாருங்கள். உங்கட்கும், உங்கள் நாட்டுக்கும், உங்கள் சமுதாயத்திற்கும், பாரம்பரியத்திற்கும், உலகுக்கும் நன்மை வருமா என்று பாருங்கள்-அதுதான் அறிவு.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று சொன்னார்.

பொதுவாக, ஒரு செய்தியைச் சொல்லுபவர்கள் யார் என்பதை வைத்துக் கொண்டே அச்செய்தியைப் பற்றிய முடிவெடுக்கிற ஒரு பரிதாப நிலையை-அவல நிலையை இன்று நாம் சமுதாயத்தில் காண்கிறோம். செய்தியைப்பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அச்செய்தியைச் சொல்லுகிறவர்களை ஒர் அளவு கோலாகக் கொள்ளலாமே தவிர, முழுமையாகக் கொள்ள முடியாது. அவர்கள் சொல்லுகிற கருத்து எத்தகையது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.