பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருந்தும்? விதியின் ஆற்றலை-ஊழின் வலிமையை வலியுறுத்த,

"பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

என்ற ‘நாலடியார்’ பாடலொன்றை எடுத்துக்காட்டுவார்கள். அதுவும் அவர்கள் காட்டும் புறநானூற்றுப் பாடல் போன்றதுதான்.

‘ஒரு பெரிய பசுமந்தை அதற்குள் ஒரு கன்றை அவிழ்த்துவிட்டால் அது போய்த் தன் தாய்ப் பசுவைப் பிடித்துக் கொள்வதுபோல, ஊழும் இந்த மனிதசமுதாயத்தில் தனக்கு உரியதனை வந்து பற்றிக்கொள்ளும்’ என்பது நாலடியார் பாடலின் கருத்து. கன்றுக்குப் பகுத்தறிவும் சிந்தனையும் உண்டா? ஊழின் வலிமையை வலியுறுத்துவதற்கு பகுத்தறிவும் சிந்தனையும், செயலாற்றலும் இல்லாத வற்றையே எடுத்துக் காட்டி வந்திருக்கிறார்கள்.

இனி, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்தென்ன? ஊழை அவர் முழுக்க முழுக்க மறுத்தாரா? முற்றிலும் முரண்பட்டாரா? என்றால் இல்லை. ஊழில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனிதன் அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்றார்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்'

என்கிறார். ஆற்று வெள்ளம் வேகமாகத்தான் போகிறது-மிகக் கடுமையாகத்தான் செல்லுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில்தான் போகிறது. ஆனாலும், படகிலிருந்து துடுப்புப் போடுகிறவன் நல்ல திறமைசாலியாக இருப்பானானால்-ஆற்றலுடையவனாக இருப்பானானால் அவன் ஆற்றின்