பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர்தான். ‘மன்னவனே! நீ குடிகளைத் தழுவிக் கோலோச்சத் தெரிந்துகொள்! நீ பிறப்புரிமை உடையவனல்லன்! இந்த அரசுரிமை உனக்குத் தெய்வத்தால் வந்தது என்று நீ நினைத்து விடாதே! மக்களால் உனக்கு வழங்கப் பெறுவது! எனவே, நீ குடிகளைத் தழுவி வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்ற அரசியல் சித்தாந்தத்தை - மாற்றத்தை உலகில் ‘ஜனநாயகம்’ பிறப்பதற்கு முன்னால் - மக்களாட்சிக்கொள்கை மலர்வதற்கு முன்னால் சொன்ன பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அது மட்டுமா? அப்படி நீ குடிதழீஇக் கோலோச்ச வில்லையானால், 'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்! நாட்டையும் இழப்பாய்! என்றார். நீ இழந்துவிடுவாய் என்பதுகூடப் பொருளல்ல-நீ குடிதழீஇக் கோலோச்சவில்லையானால், குடிமக்கள் உன்னைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்’ என்ற கருத்துப்பட எச்சரிக்கையும் விடுக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு இப்படி ஒரு பாடல் உண்டா? ஒரு பாடல் உண்டு. 'அரசன் தவறு செய்துவிட்டால் புலவர்கள் அவனைப் பாடமாட்டார்கள்’ அதுதான் பெரிய தண்டனை.

'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்’ என்று திருவள்ளுவர் மிக அடக்கமாகப் பேசுகிறார். ‘ஒருங்கிழந்து விடுவாய்’ என்பதைச் சற்று ஆத்திர ரீதியான வார்த்தைகளில் போட்டால், ‘மன்னவனே நீ மக்களைத் தழுவி ஆட்சி நடத்த வில்லையானால் உன்னை இறக்கிவிடுவோம்’ என்றாகும். இந்நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் ஏற்பட வில்லையா? மன்னவனை அரசு கட்டிலிலிருந்து இறக்கிவிட வில்லையா? அவன் தானாகவே இறங்கிக் கொல்லைப்புற, வழியாக ஓடிவிடவில்லையா; இதற்கெல்லாம் கால்கோள் செய்வதுபோல வள்ளுவர் பேசியிருக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு, அரசனுக்கு அறநெறி சொன்னவர்கள்-நீதி சொன்னவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனாலும்கூட இப்படி இடித்துக் கூறியவர்களைக் காணமுடியாது. ‘இப்படி