பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெறுவது விண்ணுலகுக்குப் பறந்து சென்று சந்திர மண்டலத்தைக் காண்பது போலத்தான். எனினும், இன்று, 100க்கு 70 பேர் அலுத்துச் சலித்து, சாவு வராதா என்று ஏங்கி இளைத்து மிதந்தவாறாகப் போலி வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்று பேசுகிறார் வள்ளுவப் பெருந்தகை. திருவள்ளுவர் கற்பனைக் கவிஞரல்ல-அவர் ஒரு சிறந்த வாழ்வியல் கவிஞர். அவருடைய இலக்கியத்தில் பொய்யும், புனைந்துரையும் இல்லை. அவர் சமுதாய வாழ்க்கையின் தெருப்புறத்தையும் பார்த்தார்; கொல்லைப்புறத்தையும் பார்த்தார். திருவள்ளுவர், மாணிக்கவாசகர், அப்பரடிகள் இவர்கள் எல்லோருமே சமுதாயத்திற்கு வாழ்வு நெறிகாட்டி வழி நடத்திச் செல்லத் தோன்றிய அறிவியல் ஞானிகள். அவர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தமிழ்ச் சமுதாயத்தைத் திசைமாற்றி விட்டவை, இடைக்காலத்தே தோன்றிய மடல்கள், உலாக்கள், பிரபந்தங்கள் ஆகியனவே என்று நான் கருதுகிறேன்.

வள்ளுவர் பிற்போக்கான கொல்லைப் புறத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுப் பாடியதுதான் திருக்குறளில் உள்ள 'கயமை’ என்ற அதிகாரம். வள்ளுவர் உயர்ந்த-மிகச் சிறந்த நகைச்சுவையாளர். வள்ளுவர் பேசுவது சிரிப்பாகத் தெரிகிறது. சமுதாயத்தைப் பார்த்து அவர் சிரிக்கிறார். ‘அதோ போகிறாரே, அவர் யார்?’ என்று ஒருவர் வள்ளுவரைக் கேட்கிறார். போய்க் கொண்டிருப்பவரை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு ‘மனிதன் மாதிரி இருக்கிறது என்கிறார்; ‘மக்களே போல்வர்’ என்கிறார், இத்தகைய நகைச்சுவையை நாம் ஆங்கில நாவலாசிரியரான டிக்கன்சனின் நாவல்களில்கூடக் காணமுடியாதே.