பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செழுமைப்படுத்தி யிருக்கிறார் வள்ளுவர். இப்படி நாம் கூறும்போது சாதி இனப்பிரச்னைகளைக் கணக்கில் வைத்துக் கொண்டு பார்க்கக்கூடாது.

மனிதன் புற உலகத்தில் வளர்ந்திருக்கிற அளவிற்கு அகஉலகில் வளர்ச்சியடையவில்லை. உலகம் அவனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. புயலை, வெள்ளத்தை, நோயையெல்லாம் அடக்கியாளக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதன் பக்கத்து வீட்டுக்காரனோடு கூடிக் குலாவி அன்டோடும் பண்போடும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை.

மனிதன் உள் அமைப்பால் வளர வேண்டும். உடம்பை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனை செய்துக் கொள்வது போல, உள்ளத்தால் உணர்வால் வளர்ந்திருக்கிறோமா என்று நமது செயல் முறைகளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? மனிதனைப் பார்த்து மனிதன் என்று கூற இன்னொரு மனிதன் இல்லையென்றால் மனிதன் என்ற பெயர் எப்படியிருக்கும்? எனவேதான், மனிதனுக்கு அறம் கூற வந்த திருவள்ளுவர்,

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்:
ஆகுல நீர பிற"

என்றார். செயலால் குற்றமற்றவனாக வாழ்ந்து விடுதல் எளிது. சிந்தையால் குற்றமற்றவனாக வாழ்வதுதான் அரிது. பல பக்தர்கள் நெற்றியிலே திருநீறு பூசியிருப்பர்; சரிதான், சிறந்த பக்தர் போலிருக்கிறது என்று கருதுவோம். அருகில் போனால், அவரிடம் கொஞ்சம்கூட மனிதவாடையே இருக்காது. இவர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலனாக இரு’ என்று வற்புறுத்தினார்.

இன்று, நமது நாட்டைப் பொறுத்தவரை அறம், நீதி, ஒழுக்கம் என்பன யாவும் எல்லோரும் விளையாடும் பொது விளையாட்டுத் திடலாகி விட்டது. அந்தப் பொய்யான ஒழுக்க நெறியிலிருந்து மனிதனை விடுதலை செய்யவேண்டும்