பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



163


என்று வள்ளுவர் விரும்பினார். எனவேதான் அவர், சத்திரமும் சாவடியும் கட்டுவதை அறம் என்று கூறாமல் 'மனத்துக் கண் மாசிலனாதல் அறம்' என்றார்.

உயிர் சிலருக்குப் பொருளாக-சிலருக்கு நீதியாக - வேறு சிலருக்கு அன்பின் வடிவமாக மாறும். ‘அன்பின் வழியது உயர்நிலை’ என்றார் திருவள்ளுவர். ஆனால், இன்று உலகியலில் அழிக்கும் சக்தி வளர்ந்திருப்பதுபோல, அன்பு காட்டும் முறை வளரவில்லை. அன்பும் வாழ்க்கையும் என்பும் தசையும்போல.

வெகுளாமையை வலியுறுத்திய வள்ளுவருக்கும் வெகுளி வருகிறது. அப்படி வெகுண்டெழுந்து,

‘செத்தாருள் வைக்கப்படும்,’ ‘அவியினும் வாழினும் என்? என்றெல்லாம் பேசுகிறார். வெகுளியை வெறுத்தொதுக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவருக்கு வெகுளி தோன்றியது நியாயமா? என்று கேட்கலாம். தன்னலத்திற்கு ஊறு செய்யும்பொழுது வெகுளி கூடாதுதான்; சமுதாயத்தின் பொது ஒழுக்கத்திற்கு ஒருவன் ஊறு செய்தால் வெகுண்டெழுந்து தீப்போலக் காய்வதில் தவறில்லை.

வள்ளுவர் பல்வேறு கோணங்களில் அருமையான தொரு ஒழுக்கக் கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்; பல்வேறு சாளரங்களையுடைய ஒரு சுகாதாரமான நல்ல வீடு அது. ஒழுங்காக ஒவ்வொரு கல்லாக வைத்து அடுக்கி அந்தக் கட்டிடத்தை அவர் எழுப்பினார். வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வாழ உறுதி கொண்டால் பத்து ஆண்டுகளில் நாம் ஒப்புயர்வற்ற ஒரு மனிதனாக வாழ முடியும்.

இனி வள்ளுவருக்கு விளம்பரம் தேவையில்லை. வள்ளுவரின் வாழ்க்கை முத்திரை வீட்டிலும் நாட்டிலும் பதிக்கப்பெற வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்! வள்ளுவர் காட்டிய ஒழுக்கச் சமுதாயத்தைக் காண முயற்சி செய்யுங்கள்! வள்ளுவத்தைத் தமிழகத்தின் வாழ்க்கை நெறியாக-ஒழுக்க நெறியாகக் கொண்டுவரப் பாடுபடுங்கள்!