பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



165


நமது சித்தாந்தத்தைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. உயிர்கள் வினைகளின் வழிப்பட்டபயனை அனுபவிப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘இருள் சேர் இருவினை’ என்று பேசுகின்றார். இருவினைப் பயன்கள் மன மொழி மெய்யால் செய்யப்படுகிற செயல்களால் விளைவன.

ஒலிப்பதிவு நாடாவில்-டேப் ரிக்கார்டரில் நாம் ஒலிப்பதிவு செய்ததையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்து விட்டுப் புதுப்பதிவு செய்யவேண்டும். அது போல நம் உயிரின் ஒலிப் பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல்போல் தொடர்கின்றன. நாம் ஒன்றைச் செய்யும்போது, ‘நான் செய்கின்றேன்’ என்ற எண்ணத்தோடு செய்யக்கூடாது. தான் செய்வதாகக் கருதும் தன்முனைப்புக் கூடாது என்பது திருவள்ளுவர் கருத்து.

நமது காந்தியடிகள் ‘நான் சொல்லுகிறேன்' என்று என்றுமே சொல்லியதில்லை. என்னுடைய அந்தராத்துமா சொல்லுகிறது என்றுதான் எப்பொழுதும் கூறினார். அவர் கொஞ்சமும் தன் முனைப்பு இல்லாதவராக வாழ்ந்தார். அவர் பகைவனிடத்தும்கூடக் காழ்ப்புக் கொண்டதில்லை. எனவே அவர் இருள் சேர் இருவினையும் தன்னைப் பற்றாமல் காத்துக் கொண்டார்.

பிறவியுண்மை நமது சமயத்திற்கு மிகவும் முக்கியமானது. இன்றைய உழைப்பின் பயனை நாளை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் உயிர்நலத்தில் நாட்டம் ஏற்படும். பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பினார். காந்தியடிகளும் பிறவித்தளை நீங்க வேண்டும் என்று விரும்பினார்.