பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இருவினைகளிலிருந்தும் விடுதலை பெற, பொய்தீர் ஒழுக்கநெறி நிற்க வேண்டும். காந்தியடிகள் மிக எளிய உணவையே உண்டுவந்தார்-மிக்கெளிய தோற்றம் உடையவராகத் திகழ்ந்தார்-மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திறந்த மேனியராக வாழ்ந்தது போலவே, திறந்த உள்ளத்தினராகவும் வாழ்ந்தார். எனவே காந்தியடிகள் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தார் என்பதைக் காட்டிலும், ஐம்பொறிகளும் தாமே அடங்கின என்பது சாலப் பொருந்தும். அவர் வாழ்க்கையில் இரகசியம் என்பதே கிடையாது. அவர் தம்மால் முடிந்ததை ஒழுக்கமாக ஏற்றுக் கொண்டார். இடையே தொய்வே ஏற்படாமல் பாதுகாத்து வாழ்ந்தார்-பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்”

என்றார் திருவள்ளுவர். அதன்படி காந்தியடிகள் வாழ்ந்தார். எனவே கர்ந்தியடிகள் அன்று வாழ்ந்தார்-இன்று வாழ்கிறார் - என்றுமே வாழ்வார்.

காணப்பட்ட உலகத்தின் மூலமாகக் காணப்படாத இறைவனைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அகரமுதல எழுத் தெல்லாம்’-என்பது குறட்பா. இறைவனைக் காட்டுகின்ற மிகப்பெரிய புத்தகம் இயற்கை ‘கடவுள் பிரார்த்தனை இல்லாமற்போனால் நான் செத்துப் போவேன்’ என்கிறார் காந்தியடிகள். ‘என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து இயங்கினான்’ என்று அப்பரடிகள் பேசுகிறார்.

'கடவுள் உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா' என்று காந்தியடிகளைக் கேட்டபோது, ‘நீங்களும் நானும் இருப்பது உண்மையானால், நமது பெற்றோர்கள் வாழ்ந்தது உண்மையானால், நமது பிள்ளைகள் இருக்கப்போவது உண்மையானால் கடவுளும் உண்டு’ என்று அவர் கூறினார். அவர் குண்டடிபட்டு விழுந்த போதும்கூட ‘ராம்ராம்’