பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்மிடை இல்லை. அன்று, பன்றிக் குட்டி ஒன்று பால் இன்றிப் பசியால் கதறியது. அந்தக் கதறல் அண்ணல் சோமசுந்தரப் பெருமான் திருச் செவிக்கு எட்டியது. அண்ணலே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டிக் காப்பாற்றினார். இன்று, மதுரைமா நகரிலே கதறியழும் மனிதனுக்குச் சோறு கொடுக்க யார் முன் வருகிறார்கள்?

ஒரு கல்யாணம் என்றால் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு அண்டாவும் சட்டிகளும் வாங்கிக் கொடுக்கிறார்களே, ஒரு நூறு ரூபாய்க்காவது புத்தகம் வாங்கிக் கொடுக்கின்றவர்களைப் பார்க்கிறோமா? தமிழர்கள் தமது வீட்டை அடுப்பங்கரையாக்கியது போதாதென்று கோயில்களில் மடப்பள்ளிகள் கட்டி, அவற்றையும் அடுப்பங்கரையாக்கி விட்டார்களே! இங்கு வயிறு வளர்ந்துள்ள அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கிறதா? வயிற்றை வளர்க்க எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கால் பங்காவது அறிவை-உணர்வை வளர்ப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? நாட்டில் அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்பட வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் வள்ளுவர் தோன்றி வாழ்ந்து இலக்கியம் செய்தார் என்பதற்குரிய அடிச்சுவடு-இலக்கிய மணம் தனி மனித வாழ்க்கையில்-சமுதாயத்தில்-நாட்டில் காணப்படுகிறதா?

நம்முடைய நாட்டில் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவை செய்முறையில் வரவில்லை. கொஞ்சமாகப் படித்தாலும், படித்ததை வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்! படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற இடைவெளியைக் குறையுங்கள். சாப்பிடுவதைக் கடமையாகக் கொள்வது போலப் படிப்பதையும் கடமையாகக் கொள்ளுங்கள்.

இருபது ஆண்டுகட்குமுன் விற்ற கண்ணாடிகளைவிட இன்று ஏராளமான கண்ணாடிகள் விற்பனையாகின்றன.