பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்வித்து வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுள்ளம்.

தேவலோகத்திற்குப் போய்த் தெய்வத்தைத் தேடுவதை விட உன்னையே நீ தெய்வமாக்கிக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதற்கு உண்டால் மட்டும் போதாது-வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்., கை கால்களும், தலையும், உடலும் இருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. மனிதனுக்குரிய மனச்சாட்சியோடு வாழ்பவன்தான் மனிதன். இதை நன்றாகப் புரிந்து கொண்டுதான் ‘வாழ்வாங்கு வாழு’ என்று பேசினார் திருவள்ளுவர்.

மனிதன் எண்னக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே திருவள்ளுவர் செய்த முதற் புரட்சி. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப’ என்றார். கிறித்தவ மதத்தலைவர்கள் மனித சமுதாயத்தை எண்ணிச் சிந்தித்து, அந்த மனித சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்டதுபோல இங்குப் பல இலட்சக்கணக்கான வெண்பொற்காசுகளையும் ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையும் வைத்துக் கொண்டிருக்கிற நமது சைவ சமயத் தலைவர்கள்-காவி வேட்டி ஜமீன்தார்கள் மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.

அகமும் புறமும் ஒத்த வாழ்க்கை தேவை மனத்தது மாசாகக் கூடாது. மன மாசைக் கழுவித் தூய்மைப் படுத்தத்தான் வழிபாடு, கடவுள், மத நம்பிக்கை எல்லாம். இன்றோ, குளம் சாக்கடையாக மாறியதுபோல மதம், கடவுள் நம்பிக்கை யாவும் வெறும் சடங்குகளால் நிறைந்து விட்டன.

தமிழகத்துத் திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதி வழிபட வேண்டும் என்று நான் கூறியபோது, பலர் என்னைக் கருப்புச் சட்டை என்று கூறினார்கள். எனக்கு மொழி, இன சாதி வேறுபாடுகள் கிடையாது. வழிபாடு என்ற குளத்தில் மனம் குளிக்க