பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சீர்த்திருத்தம் நாளை மரபாகிவிடும். இது வளரும் உலகத்தின் இயற்கை. இந்தத் திருக்குறள் விழாவை நடத்துகிறவர்கள் நான்கு ஆண்டுகட்கு முன்பு இவ்விழாவை ஆரம்பித்தபோது அது புதுமை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் என்று மரபின் வழிச்சேர்த்து வழங்குகிறோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தனிப்பெரும் நூல் செய்த திருவள்ளுவரின் கருத்து இன்று நமக்கு மரபாகி இருக்கிறது. பொதுவாக, பொருளுடைமையில் ஆசையிருப்பதென்பது மரபு. ஆனால், பொருள் வருவதற்குரிய வழியைக் கண்டுபிடி-அவ்வழிப் பொருளைப் பெருக்கு என்ற வள்ளுவர் கருத்து மரபல்ல.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். அவர் கடவுள் வாழ்த்தோடு நூலைத், தொடங்கியதாலேயே அது மரபு என்றாகிவிடாது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் அரசியல் துறையில் சீர்திருத்தம் என்றால், நிலமே இல்லாமலோ அரசியலே இல்லாமலோ சீர்திருத்தம் செய்வதில்லை. நிலம், அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டுதான் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். இதைத்தான் வள்ளுவர் செய்திருக்கிறார். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார் என்றாலும், தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, நால்வகை நிலங்களையும் அந்தந்த நிலங்கட்குரிய தனித்தனி நான்கு கடவுள்களையும் திருக்குறள் பேசவில்லை. திருவள்ளுவர் பொருள் குறிப்பிலே, குணக்குறிப்பிலேதான் கடவுளைக் குறிக்கிறார். நாட்டில் வேறுபாடற்ற-ஒருமித்த கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று விரும்பி வலியுறுத்தினார். வழிபாடுபற்றி அவர் குறிக்க நேர்ந்தபோதும் வெறும்-ஆரவாரமான சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. நினைத்தலையும், சிந்தித்தலையும் அதன் மூலமாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்ளுதலையுமே வள்ளுவர் குறிக்கிறார்.