பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

செயல்திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்’ என்பது வள்ளுவர்தம் உள்ளத்தை உணர்ந்து எழுதியதாகும் (29). அறிவறிந்த பெற்றோர்க்கே அறிவறிந்த பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது இவர் காணும் புதியவுரை (30, 31) மிக நுட்பமானது. ஒழுக்கமுடைமைக்கு இவர் மிக விரிந்த பொருள் காண்கிறார் (61). ‘ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது’ என்பது இவர் தரும் விளக்கம் (106). ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பும் செய்யும் தொழிலால் வேறுபடாது; உயர்வு தாழ்வெனல் ஆகாது’ என்ற இவரது விளக்கமே, குறளுக்குப் பொருத்தமுடையதாகும். (115)

தாய்மொழி வழிக்கல்வி பற்றி இவர் எழுதியுள்ளவை இன்று, மிகுதியும் எல்லோர்க்கும் அறிவிக்க வேண்டிய செய்தியாகும் (262 - 276). இந்திய தேசிய மொழிகள், தமிழ் உட்பட இந்திய ஆட்சிமொழியின் தகுதி பெற்றால், இந்தியை நாட்டின், பொதுமொழியாக, உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம்’ என விவாதிக்குமிடம் மிகமிகச் சிறந்த கருத்தாகும். ‘சாதி அடிப்படையில் சலுகைகள்’ என்பது பற்றிய இவரது சிந்தனைகளை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். தவம் பற்றிய விளக்கம் (236), தமிழில் வழிபாடு பற்றி இவர் ஆணித்தரமாக எடுத்துரைப்பவை, திருமணத்தில் புத்தகங்களைச் சீர்கொடுக்கலாகாது என்னும் இவர்தம் கருத்து என இந்நூலுள், தேடத்தேடக் கிடைக்கும் அரிய கருத்துக்கள் மிகப் பலவாகும்.

திருக்குறளை வாழ்வியல் நோக்கில் பார்க்க, இந்நூல் மிகச் சிறந்த துணையாகும் என்பதில் ஐயமில்லை.

தமிழண்ணல்