பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற குறட்பாவில் திருவள்ளுவர் தேவர் என்ற மரபை ஒத்துக்கொண்டு, மனப்போக்குப்படிச் செயல் செய்கிறவர்களைக் கயவர்களாக்கி, அவர்களைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் பேசியது சீர்திருத்தம்.

ஊழ் மரபு, அதனை வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மரபுக்கட்சியினர். ஊழை எந்த அளவில் வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார்?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்"

என்று வள்ளுவர் கூறுகிறார். இதிலும் ‘முந்துறும்’ என்கிறாரே தவிர ‘ஊழே வெல்லும்’ என்ற உறுதிப்பாட்டை அவர் உணர்த்தவில்லை. மேலும்,

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்'

என்ற குறட்பா மூலம், தளர்வுறாமல் முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிட முடியும் என்று எடுத்துக் கூறுகிறார். ஊழ் என்ற மரபை ஒத்துக்கொண்டு, தளராத முயற்சியால் அதை வென்று விடலாம் என்ற சீர்திருத்தக் கருத்தையே வள்ளுவர் வற்புறுத்தியிருக்கிறார். நிலத்தையும், வீட்டையும் வைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களைச் செய்வது தான் சீர்திருத்தம். இதைத்தான் திருவள்ளுவர் செய்தார்.

8. வான்புகழ் வள்ளுவன்

தேசீயக் கவிஞன் பாரதி. பல இலக்கிய மேதைகளைப் பாராட்டித் தமது கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளார். பலரைப் பாராட்டியிருந்தாலும் திருவள்ளுவரைப் பாரதி பாராட்டிய முறை தனிச்சிறப்புடையது. பாரதி, திருவள்ளுவருக்குச் சூட்டிய புகழ்மாலை. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" என்பது.