பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விலக்கி நல்லதை நாடி-அறத்தைப் போற்றி-மறத்தைக் கடிந்து- அன்பை நாடி-பண்பை அழித்து-அறிவைப் பேணி மடமையை அழித்து- துன்பம் நீக்கி-இன்பமளித்து வாழ மனிதனுக்கு நெறி காட்டுவது அவனது சிந்தனைச் சிறப்புத்தான்.

சிந்தனைச் சிறப்புமிக்க மனித குலத்தில் பண்டு முதலே கற்றோரும்-மற்றோரும் போற்றுமளவுக்கு வாழ்ந்து, வாழ்க்கை நெறிகண்ட இனம் நமது தமிழினம். மனிதன் கண்ட கண்டபடி புலனைச் செலுத்திச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் சிறப்பு மிகுந்த தத்துவங்களை வாரி வழங்கிய இனம் தமிழினம். காலத்தாலும் கருத்தாலும் மூத்த உலக வரலாற்றில் தனக்கென ஒர் இடத்தைப் புனிதமான ஒரு நிலையைப் பெற்ற பெரும்பேறு நமக்கு உண்டு. ஆனால் இத்தகு தகைமையை நினைந்து இறும்பூ தடைவதில் காலத்தைப் போக்கியதாலே தான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம், இல்லை, இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித்தோன்றல்கள் - எப்படி யாவது வாழ-எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து வாழும் சமுதாயத்தை உருவாக்க அவாவுறவேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க விரும்புதல் வேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும்