பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



191


முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக செயற்கைக் கோலம் தாங்கும் இந்தியிலும் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. ஏன்? இந்திய நாட்டின் சமயத்திற்குரிய மொழி என்றும், பாசம் ஒன்றின் காரணமாகவே சிலரால் பாராட்டப்பெறும் சமஸ்கிருதத்தில் கூட வாழ்க்கைக்கென்று முறையான இலக்கணமில்லை. தமிழில் எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில் இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் இயற்றித் தந்துள்ளார். தமிழிலக்கிய வழக்கில் பொருள் என்றால் பயன் என்றே கொள்ளப் பெறும். மொழியின் பயன் நல்வாழ்க்கையேயாம். ஆதலால் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் தனிமனிதன், வாழ்க்கைத் துணையுடன் கூடி வாழும் மனையற வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை அகத்திணை இயலிலும், அவனே சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குரிய நெறிமுறைகளை புறத்திணை இயலிலும் இலக்கணமாக வகுத்துச் செய்துள்ளார். இத்தகு சிறப்புடை மரபில் உலகுபுகழ் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறளின் சிறப்பு

திருக்குறள் பயில் தொறும் இன்பந்தரும் நூல். ஒரு முழுதுறழ் அறநூல். இனிய தமிழ், எளிய நடை, மனம் கொளத்தக்க குறுகிய அளவு. இருபொருள் படாத தெளிந்த நடை. ஐயத்தின் நீங்கிய துணிபு, இனம், மொழி, மதம் சார்பற்ற தன்மை, காலவெள்ளத்தில் அழியாத நீதி, ஓரின ஒழுக்கம் பேசாமல் உலக ஒழுக்கம் பேசிய ஒட்பம், வீட்டையும், நாட்டையும் பிணைத்த பெட்பு, இருவகைக் காதலையும் எடுத்துக் காட்டிய இனிய சால்பு. குற்றங் காட்டுதல்-குற்றம் கடிதல், நன்றின்பால் உய்த்தல் ஆகியன