பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூல்களைக் கற்க வேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும் வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் “கசடறக் கற்பவை" என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டுமல்லன் புறத்துறுப்பால் மட்டும் மக்கள் போல் தோற்றம் அளிப்பவர்களை "மக்களே போல்வர்" என்று கிண்டலும் கேலியும் செய்கிறது. இந்த இரு சொற்களில் திருவள்ளுவர் வெளிப்படுத்தும், வேதனை கலந்த போலி மனிதனை விமர்சனம் செய்யும் உணர்வு வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் உணர்வைவிட விஞ்சி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.

"புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்?" என்பது திருக்குறளின் வினா. புறத்துறுப்புக்களைப் பொருளுக்கு உரியனவாகவும் புகழுக்குறியனவாகவும் ஆக்குதல் அகத்தியல் வளமையேயாம். உடல் வளத்திற்கு அடிப்படை உணவு, செரித்தல், வலிமை ஆதல்; அகத்தியல் வளத்திற்கு அடிப்படைக் கருத்து அனுபவமும், ஒழுக்கமுமாம்.

அன்புடைமை

அறிவைத் திருவள்ளுவர் கருவியாகவே கருதுகிறார். "அறிவு அற்றங் காக்கும் கருவி" என்பது குறள், அறிவின் உயிர்ப்பும் பயனும் அன்பேயாகும்.

அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை

என்பது குறள். திருவள்ளுவர் உயிரை எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதுகிறார். "உயிரினும்" என்று குறிப்பிடுவதே இதற்குச் சான்று. இந்த உயிர் தங்கியிருந்து இயங்குவது உடலிலேயாம். இதனை "உடம்போடுயிரிடை நட்பு" என்று கூறும். ஆயினும் உயிர் அமைப்பாலும் தோற்றத்தாலும் உடம்பிடைத் தங்கி இருந்தாலும் அன்பினில் உயிர்