பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



195


நிலையைப் பொருத்திக் கொள்ளுமாறு வள்ளுவம் வழி நடத்துகிறது. உடலிடை மட்டும் உயிர் தங்கிக் கிடக்க வாழ்தல் விலங்கியல் வாழ்க்கை. அன்பினில், குறிக்கோளில், சால்பில் உயிரை நிறுத்தி வாழ்தல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகும்.

அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்ப நட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும், கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும் தமிழன நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால், உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாளம் உண்ணலும் ஓடித்திரிதலும் அன்று.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள், எலும்பு போர்த்த உடம்பு யாதொன்றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்றவர்க்கும் கேடு செய்யும். ஏன்? தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில்லாத தோடன்றித் தீமையும் விளைவிக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமை