பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



201


தத்துவத்தின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சியுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயன்று வந்துள்ளனர்-வருகின்றனர்.

புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும். புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஒர் உலகம்

இன்று எங்கும் ஓர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஒர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ.நா.சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப்பேரவையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவை தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை மானிட சாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.