பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



203


"மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்தாலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசீய இலக்கியமாகத் திருக்குறளை, ஏற்றுக் கொண்டு, இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப் பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்பந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக்கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனிதகுலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத்துறைகளில் நடை முறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது; அதுமட்டுமன்று; கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக் கொள்ள