பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
சிந்தனை மலர்கள்

1. மனத்துக்கண் மாசிலனாதல்

மனம், மனிதனின் சிறந்த அகக்கருவி. மனிதனின் செயற்பாடுகளுக்கெல்லாம் மனமே முதல் நிலைக்கருவியாக அமைகிறது. செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்ற செய்திகளை, வாயிலாக இருந்து ஆன்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மனமே! மனம் தூய்மையாக இருந்தால் மந்திரங்கள் செபிக்க வேண்டியதில்லை என்று கூறுவர். மனம் தூய்மையாக இருப்பது நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது; நல்ல சமுதாயத்திற்கும் இன்றியமையாதது. புறத்தோற்றங்கள், மற்றும் செயல்கள் எப்படியிருப்பினும் மனம் தூய்மையாக இருந்தால் புறத்தோற்றம் கருதி யாரும் இகழமாட்டார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தூய்மை பெறுதல் வேண்டும்.

மனத்துக்குத் துய்மைக்கேடு எப்படி வருகிறது? மனம் இரண்டு வகையில் தூய்மைக் கேடு அடைகிறது. முதலாவது ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமை. இரண்டாவது புறச் சூழ்நிலை. ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமையினாலேயே