பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



211


அவற்றை உரியாரிடத்திலேயே இனிய சொற்களால் பேசி நயந்த முறையில் திருத்தம் காண முயற்சி செய்யலாம். வருத்தம் தருகிற ஒரு கட்டி, உடலில் இருக்குமானால் அதை உடனே அறுக்க முடியாது. அந்தக் கட்டிக்குச் சில ராஜோபசாரம் செய்து மருந்துபூசிப் பழுக்கவைத்துப் பின்தான் அறுக்க வேண்டும். உடலில் வேண்டாத உரோமங்கள் இருப்பதை நீக்கும் முயற்சியில்கூட தண்ணீர் தடவிப் பதப்படுத்தித்தான் நீக்க வேண்டியிருக்கிறது. அது போலத்தான் குற்றமுடையாரைத் திருத்துவதற்கும் கூடச் செய்ய வேண்டும். முதலில் குற்றமுடையாரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முழு அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நேசம் குற்றத்தின் இயல்புவழிச் செல்லாத மேலாண்மையுடையதாக இருக்க வேண்டும். குற்றமுடையாரை முதலில் அங்கீகரிக்க வேண்டும். மதிப்புயர் மனிதர்களாக நடத்த வேண்டும். அதன் பின்தான் நம்முடைய திருத்தப் பணிகள் கனியெனக் கனியும். ஆதலால், இன்சொல் எந்தச் சூழ்நிலையிலும் இன்பத்தைத் தரும்; வெற்றியைத் தரும்; புகழ்மையைத் தரும். எந்தச் சூழ்நிலையிலும் இன்சொல் பிழைபோகாது.

இங்ஙணமின்றி இவன் தகுதியில்லாதவன்; கீழானவன், பாடிக்கறக்கிற மாட்டைப் பாடித்தான் கறக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வன்சொல்லால் திட்டுவது பயன்தராது. பயன்தராதது மட்டுமின்றி எதிர் விளைவுகளையும் உருவாக்கும். மானுட வாழ்வின் அமைதி கெடும்; அவலம் பெருகும்; ஏன் வன்சொல் பேசுகிறீர்கள்? மற்றவர் கூறும் இனிய சொல் தனக்கு இன்பம் தருவதை அனுபவித்து அறிகின்ற ஒருவன், மற்றவரிடம் வன்சொல் சொல்வது என்ன பயன் கருதி? என்பது திருவள்ளுவர் எழுப்பும் வினா! ஆதலால் வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!