பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுடுசொல் கூடாது! கூடவே கூடாது! இனிய சொற்களையே வழங்குங்கள்! மற்றவர் மனம் மகிழத்தக்க சொற்களையே சொல்லுங்கள்! இன்பத்திற்காகப் பேகங்கள்! அதுவே வாழ்க்கையின் வெற்றிக்குவழி!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது”

என்பது திருக்குறள்.

13.9.86
வாழ்வாங்கு வாழ்க!
(3)

மானுட வாழ்க்கை இயற்கையாய் அமைந்தது; இன்பமாய் அமைந்தது. இயற்கை வாழ்க்கையில் இன்பமே! எந்நாளும் துன்பமில்லை! இனிய சொற்களை வழங்கும் இயல்பு இயற்கையிலேயே மனிதனுக்கு உண்டு. இன்சொல் வழங்குதலே இயற்கை; இயல்பாய வாழ்க்கை. ஆதலால், நமக்கே உரிமையுடையனவாய இன்சொற்களை வழங்கிப் பழக வேண்டும். இன்சொல் இயம்பும் இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிதாக இல்லாத சொற்கள் - அதாவது கடுஞ்சொற்கள் செயற்கைத் தன்மையன; அழுக்காற்றில் தோன்றுவன; வெகுளியில் பிறப்பன. உள்ளுறுப்புகளையும் செங்குருதியையும் சூடாக்கித் தோன்றுவன; அதிக மூச்சுக் காற்றைக் குடிப்பன; உடற்பாதிப்பைத் தருவன; கடுஞ் சொற்களைத் தொடர்ந்து கூறுபவர்கள் காலப் போக்கில் நிறம் மாறுவர்; குணம் மாறுவர்; உடல் நலப் பாதிப்புக்கு ஆளாவர்; நோய்க்கு விருந்தாவர்; சமுதாயத்தில் தனிமைப் படுத்தப்படுவர். கடைசியில் அவர்களுக்குத் திறக்கப்படும் ஒரே வாயில் நரகத்தின் வாயிலேயாம்.