பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



213



சிலர், தங்களிடத்தில் உள்ளனவற்றை நுகரார்; பயன் படுத்தமாட்டார்; ஆனால் மற்றவர்களிடத்தில் இருப்பதை விரும்புவர்; காமுற்று அலைவர். தம்மிடம் உள்ளதைவிட அது தரம் குறைந்ததாக இருந்தாலும் விரும்புவர். அதைப் பெறமுடியாது போனால் களவு செய்யவும் துணிவர். ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் நல்ல பழுத்த கனிகள் உள்ள மாமரங்கள் நிற்கின்றன. அந்த மாமரங்களிலிருந்து கனிகள் பழுத்து உதிர்ந்துள்ளன. இக்கனிகளை அவர் எடுத்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை; உரிமையாலும் தடையில்லை; சுவையாலும் தடையில்லை. ஆயினும் இந்தக் கனிகளின்மீது அவருக்கு நாட்டமில்லை. அடுத்த வீட்டுத் தோட்டத்து மாமரங்களிலுள்ள காய்களிலேயே அவருக்கு நாட்டம், வேலிக்கு அப்பாலுள்ளதிலேயே நாட்டம். அவை பிறருக்கு உரிமையுடைய காய்கள்! சுவையில்லாத காய்கள்! ஆயினும் அறியாமையின் வழித் தோன்றிய விருப்பத்தால் அக் காய்களைக் கவர்ந்துண்ண ஆசைப்படுகிறார். இப்படிக் கவரும் முயற்சி எத்தகைய இன்னல்களைத் தரும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த அவலம்? இனிய சொற்களை வழங்குதல் நமது பிறப்பின் வழிப்பட்ட இயல்பு; கருவில் அமைந்த திரு. இனிய சொற்களையே வழங்குவோம்! காயினைப் போன்ற இன்னாச் சொற்களைக் கூறி மற்றவர்களைத் துன்பத்தில் ஈடுபடுத்த வேண்டாம்! அவ்வழி நாமும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாம்!

திருவள்ளுவர் நயம்பட,

"இனிய உளவாக இன்னாத கூறல் கன்னியிருப்பக் காய்கவர்ந் தற்று"

என்கிறார். கனி, இனிய சொல்லுக்கு உவமை. காய், கடுஞ் சொல்லுக்கு உவமை. இங்கு ‘இன்னாத’ என்றதால் சொல்லளவில் மட்டுமல்லாமல் பயனிலும் இன்னாதது என்பதை உணர்த்தினார். சொல்லிலும் பொருளிலும்