பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருசேர இன்பம் பயக்கத்தக்க சொற்களைத் தேர்ந்து சொல்வோர் சான்றோர். சொல் இனிமையாக இருந்து விளையும் பயன் இன்னாததாக இருந்தாலும் பயனில்லை. விளையும் பயன் இன்பமாக இருந்தாலும் பேசிய சொல் இன்னாததாக இருந்தால் அதனை முழுமையான பயனாகக் கருத முடியாது. ஆதலால், எல்லோருக்கும் இன்பம் வேண்டும் என்று விரும்புக, விழைவுறுக! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். எனவே மனத்தை நாள்தோறும் அன்பில் நனைத்து நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்க! இனிய மனத்தில் - குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும். எல்லாருக்கும் இன்பம் வேண்டும் என்ற இன்பக் குறிக்கோளை இனிய சொற்களால் எடுத்து விளம்புக! எங்கும் இன்பம்! யாண்டும் இன்பம் சூழ்க! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

14-9-86
3. வன்சொல் தவிர்க்க!

வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ‘சொல்’ சொல்லப்படுவது அன்புப் பரிமாற்றத்திற்கே! ‘சொல்’ சொல்லப்படுவது உறவினை வளர்த்துக் கொள்வதற்கே! சொல், பயனுடையதாக அமைதல் வேண்டும். வன்சொல் என்ன பயனைத் தரும்? யாதொரு பயனும் தராது! எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும். வன்சொல் தவிர்த்திடுக! இனிய சொற்களையே வழங்குக!

சொற்கள் அன்பில் கலந்தவையாக இருக்க வேண்டும். செவிக்கும் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக அமைதல் வேண்டும். சில சொற்கள் செவிக்கு இனிமையாக இருக்கும். ஆனால் சிந்தனைக்கு இனிமையாக இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக இருப்பதில்லை! ஆதலால் வாழ்க்கையை வளர்க்கும் இன்சொல் கூறுக!