பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



215



குணங்களைச் சொல்ல வேண்டும். குற்றங்களைப் பேச வேண்டும். இது அப்பர் அடிகள் காட்டும் வாழ்க்கை முறை. ஒருவருடைய குணங்களை அவரில்லாத இடத்தில் எடுத்துக் கூற வேண்டும். யாதானும் குற்றமிருப்பின் அவரிடம் நேரில் பேசும்பொழுது அதை எடுத்துக் கூறல் வேண்டும். நம்மில் பலர் இந்நெறிக்கு மாறுபட்டே வாழ்கின்றனர். ஒருவரது குற்றங்களை எடுத்துக் கூறுதலே ‘சிறுமை’ என்பார் திருவள்ளுவர். ‘சிறுமைதான் குற்றமே கூறிவிடும்" என்பதறிக!

வன்சொல் வரிசையில் தூற்றுதலுக்கு அடுத்தது கோள். ஆண்டாள் நாச்சியார் ‘தீக்குறள்’ என்பார். கோள் மிகவும் கொடுமையானது; கலகம் விளைவிப்பது; அமைதியைக் கெடுப்பது. வன்சொல் வரிசையில் தவிர்க்க வேண்டியவற்றுள் கோள் தலையாயது. அடுத்து இன்சொல்போலத் தோற்றித் தீமை செய்வது முகமன். இது அமைப்பில் வன்சொல் அல்ல. பயனில் வன்சொல் என்றே கூற வேண்டும். பாராட்டுதல் வேறு; முகமன் வேறு. முகமன் மூலம் ஒருவருடைய வளர்ச்சி பாதிக்கிறது. ஆதலால் முன்னே வைத்து உரைக்கும் முகமனைத் தவிர்த்திடுக! முகமனைத் தவிர்த்திடுக!

இன்சொல், கரும்பனையது; சொல்லுவார் கேட்பார் இருபாலாருக்கும் நன்மை பயப்பது; இன்பம் பயப்பது. இன்சொல் சொல்வதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை. பதற்ற நிலை தேவைப்படாது. ஆதலால் இன்சொல் கூறுபவர் இளமையும் இன்பமும் பேணி நிற்பர். வன்சொல், இரும்பனையது. இரும்பைக் கடித்தால் என்னாவது! இரும்பு கடித்தல் யாதொரு பயனையும் கூட்டுவிக்காது. அது எய்ப்பினையும் களைப்பினையுமே தரும். ‘இரும்பு கடித்து எய்த்தவாறே’ என்பார் அப்பரடிகள். இனிய சொற்கள் இயல்பாய் அமைந்தன; உரிமை உடையன; எளிதில் வழங்கத் தக்கன. இன்சொல் கனி! உரிமையில் உள்ள கனிகள்! வன்சொல்லோ செயற்கை அழுக்காறு, அவா, வெகுளி