பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தத் திருக்குறள் அருமையான செய்திகளை உடையது. தமிழர்க்கென்றே குறிப்பாய் செய்யப்பெற்ற திருக்குறளோ என்று தோன்றுகிறது. குடி என்பது ஒரே குருதிச் சார்புடைமையைக் குறிக்கும் சொல்லாகும். தமிழ் மரபில் குடி, குலம், இனம் - இவை உண்டு. பிறப்பின் வழி உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி முறைகள் இல்லை. குடி என்பது குருதி வழி மரபு. இது இன்றைய அறிவியல் உலகத்திலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற உண்மையேயாகும். ஒருவர் குறைந்த அளவு தாம் பிறந்த குடியையாவது சிறப்புற வாழச்செய்யவேண்டும் என்பது திருக்குறள் நெறி. அதனால் "குடி செயல் வகை" என்றே ஒர் அதிகாரம் அமைந்திருக்கிறது.

குடி செய்தல் என்பது, தாம் பிறந்த குடியில் உள்ள உற்றார் அனைவரையும் வளத்தோடும் மகிழ்வோடும் வாழச் செய்தலாகும். ஒவ்வொருவருக்கும் இது தவிர்க்க இயலாத கடமை. தாம் பிறந்த குடியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவோர், பருவகாலங்கள் நாள், கிழமைகள் பார்க்க வேண்டியதில்லை என்பது திருவள்ளுவர் கருத்து.

தமது குடிப்பிறந்தாரை நலமாக வாழ்விக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் பருவம், நான், கிழமை முதலியன பார்த்துக் காலத்தைக் கடத்தினால் பல்வேறு இழப்புகள் தோன்றும் என்ற கருத்தில் "பருவம் இல்லை" என்றே கூறுகிறது, வள்ளுவம். அடுத்து பருவத்தையும் நாளையும் கிழமையையும் எதிர்பார்த்து "இன்று” “நாளை” - என்று கடமைகளை ஒத்திப்போடுவது சோம்பலாகும்.

உலகில் உயிர்களுக்கு இயற்கை சுறுசுறுப்பாக இருத்தல்; சோம்பியிருப்பது செயற்கை, சோம்பியிருத்தல் கூடாது என்பதை வலியுறுத்த, "மடி செய்து" என்றார். அடுத்து "மானம் கருதக் கெடும்" என்பது மிக முக்கியமான பகுதி. மானம் என்பது பெருமை என்று பொருள்படும். மானிட சாதிக்கு மானம் பெரிது என்று "மானம்" என்ற அதிகாரத்தில்