பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



223



‘பகுத்துண்டல்’ என்றால் வெந்த சோற்றைப் பங்கிட்டு உண்ணுதல் என்ற அளவில் மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. இங்ஙனம், கொள்வதற்கு, "பல்லுயிர் ஒம்புதல்” என்ற பின் வரும் சொற்களும் அச்சொற்களின் கருத்தும் தடையாக உள்ளன. "ஓம்புதல்” என்ற சொல், அகன்ற - உயர்ந்த பொருள் நோக்குடையது. ஓம்புதல் என்ற சொல் பாதுகாத்தல், வளர்த்தல், வாழ்வித்தல் என்ற பொருள்களையும் தருகின்றது. அதாவது; உணவு, மருந்து முதலியவற்றால் பாதுகாத்தல், கல்வி - கலைஞானங்களால் வளர்த்தல், தக்காங்கு தாமே வாழும் தகுதியைப் பெறச் செய்து வாழ்வித்தல் என்றெல்லாம் பொருள் தரும். இத்தகைய கடமைகளைச் சோறு வழங்குவதால் மட்டும் இயற்ற இயலாது உயிர் வாழ்வதற்குரிய நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் களங்களைத் தனி உடைமையிலிருந்து பொதுவுடைமையாகப் பகுத்துக் கொண்டும் உறவும் உணர்வும் கலக்கக் கூடி உண்டும், வாழ்தல் வேண்டும். இத்தகு வாழ்க்கை அறவாழ்க்கை.

அறம் என்றால் கடவுளை நோக்கிச் செய்ய வேண்டும் என்பதல்ல. மனிதனை நோக்கி மனிதனுக்காகச் செய்தாலும் அறமேயாம்! இல்லை, அதுவே அறம்! இந்தத் திருக்குறள் இன்னும் வாழ்வாக மலரவில்லை! மீண்டும் மீண்டும் நமது நாட்டு மக்கள் மனித குலத்தை ஒருமைப்படுத்தி உண்பித்து வாழ்விப்பதை அறமாக ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை! ஆரவாரமான கடவுட் பூசைகள், வேள்விகள், சடங்குகளிலேயே ஈடுபடுகின்றனர். ஏன்? நமது நாட்டின் அறிஞர்களில் பலரும் கூட இத்தீமைக்கே ஆளாகி உள்ளனர். இது நன்றன்று; தீதேயாம்.

செல்வம் பொதுமையானது. பலரும்கூடி உண்டு வாழவேண்டும். எல்லா உயிர்களும் உண்டு, உடுத்து வாழ்வதற்குரிய செல்வத்தினை உழைப்பால் பெறவேண்டும். உழைப்பதற்குரிய வாய்ப்பும், உழைப்பால் உற்பத்தியாகும்