பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



229


கிளைகளும் அந்த நோக்கத்துடனேயே அமைந்தனவாம். அவைகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று நிறுத்தி வளரும் களமாக மாற்றித் தாம் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்துக்கும் கூட வாழ்வளிக்கின்றன. ஆனால் மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகிறான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினார். வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் ‘சாத்தான்’. ஆனால் பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இனநலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு. தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள்; ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம்’ என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கிறோம். வள்ளுவம், பதவுரை, பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை; பாராட்டுரைகளுக்காகப் பிறக்க வில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனித உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர்கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது! முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள். வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம்போல வாழ்த்துரைகளில் வாழ்நாளை வீணாக்குங்கள்! அஃது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ‘ஏவவும் செய்கலான் தான் தேரான்’ என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்ய முடியும்? வளர்க வள்ளுவம்.