பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


2. திருக்குறளும் ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரத நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக, சுதந்திரம் தவறிக் கெட்டுப் போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். "விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்’ என்றே பாடுகின்றான், சுதந்திரம் தவறிக் கெட்டுப் போனதற்குரிய அடிப்படைக் காரணம் பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன.

இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத் துறையிலும் சரி, சமயத் துறையிலும் சரி எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள், இமயம் முதல் குமரி வரையில் பரந்து கிடக்கும் பாரத பூமியில், பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைந்த பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, சொல் வேறு, செயல் வேறு பட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு ஒரு கலை; ஒரு நோன்பு, அகத்தில் ஒத்து, ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ, வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில்-இறைநலப் படைப்பில்