பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரணமாக ஏற்படும் குழுக்களில் ஏற்படும் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப்பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை தாய்மொழியுணர்ச்சிக்கு பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப்பெறும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் ஒருமைப்பாட்டை உண்டாக்க முடியாது. அது போலவே ஆட்சிமுறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விடமுடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின் பாற்பட்டது. அது ஒரு கலை; அது ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒரும்ைப்பாட்டை சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழி வகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ, "ஒரு நாட்டுமக்களை ஒத்த உரிமையுணர்வுடன் இணைக்க ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்" என்று கார்லைல் கூறினான்.

பாரத நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளாயிற்று. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒரு வருடைய அல்லது எந்தவொரு இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு, ஆயினும் பாரத நாட்டின் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலங்களுக்கு கேடுவிளைவிப்பதாயின் அது ஒரு நலனே அல்ல; தீமையேயாம். நன்மை நன்மையைத் தோற்றவிக்குமே தவிர தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி-மறந்தும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி-மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க