பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



233


முடியும். ஆதலால் தான் தேசீய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறான்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்களில் இருப்பது அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பது போலப் பண்டு இன்மையின் காரணத்தினாலும், போர்க் கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், இன்று ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரத நாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப்பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக் கூறும் ஒழுக்க நெறிகளும் கற்பனையில் தோன்றியவை அல்ல; அதீதமானவைகளுமல்ல. சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார் திருக்குறளாசிரியர். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை அவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று வரையறுத்துக் கூறுவதால், பிறப்பின் வழிப்பட்ட வேற்றுமைகளைக் களைகிறது. ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்று கூறினமையால், சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு