பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும். ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவை திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"

என்றும்,

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

என்றும், கூறியிருப்பது அறியத் தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார் திருவள்ளுவர். இதனை,

"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

என்ற குறளால் அறியலாகும்.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம். அதாவது-தேசிய இலக்கியம். நிலம், குலம், சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது மானிடச் சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப்பெற்ற நூலை உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்கவேண்டும்.

இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமைய வேண்டும். அதுபோழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும். பாரத சமுதாயமும் வளரும.