பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


4. வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலர்ந்தது. வரலாற்றுக்கு எட்டியவரையில் வள்ளுவத்தைப் போல் செப்பமான ஒரு வாழ்வியல் விஞ்ஞான நூல், வள்ளுவம் தோன்றிய காலத்தில் எந்த மொழியிலும், தோன்றவில்லை. ஏன்? மாமுனிவர் கார்ல்மார்க்சு தந்த 'மூலதன’த்தைத் (Capital) தவிர இன்னமும் எந்த நூலும், தோன்றவில்லை. திருக்குறள் தோன்றிய பின் பல நூறாண்டுகள் கழித்து கார்ல்மார்க்சின் ‘மூலதனம்’ முகிழ்த் திருக்கிறது. சிந்தனையில் ஒருமைப்பாடு, தத்துவப் பார்வையில் ஒரு நோக்கு, திருக்குறளுக்கும், ‘மூலதன’த்துக்குமிடையே இருப்பதை அறிந்தோர் அறியலாம். ஆயினும், அவற்றுக்குள் வேறுபாடு இல்லையென்று யாரும் கருத வேண்டாம். கார்ல்மார்க்சு தந்த மூலதனத்திற்கும் முதற் பாவலர் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. ஆயினும் முரண்பாடுகளைக் கடந்த விழுமிய ஒருமைப்பாடும் உண்டு. காலத்தால் பிந்தியதால் ‘மூலதனம்’ செய்த கார்ல்மார்க்சு, வள்ளுவம் தத்துவமாக சொன்னதை விரிவாக்கி விளக்க உரை தந்துள்ளார். லெனின், அந்த ‘மூலதன’த்தையும் விரிவாக்கி விளக்கினார். காலம் வளர வளரக் கருத்து வளர்தலும், தெளிவு தெரிதலும் இயற்கை.

மார்க்சீயம்; அறிவு நிலையானது என்று கூறுவதல்ல. அறிவு, வளர்ச்சிக்குரியது. அறிவு, மேன்மேலும் வளராமல் தேக்க நிலை எய்துமானால் மனித சமுதாயம் பாழ்படும் என்பது மார்க்சீயத்தின் மெய்ஞ்ஞானம். ஆம்! ஊற்றுவளம் இல்லாத நீர்நிலை கெட்டுத்தானே போகும்? ஒடும் இயல்பில்லாத ஒன்றுக்கு ஆறு என்று பெயருண்டோ? அதுபோல வளரும் இயல்பில்லாத ஒன்றுக்கு அறிவு என்று