பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
அடிகளார் மடல்

1. வாழ்வாங்கு வாழ்க

இனிய தமிழ்ச் செல்வ! வாழ்த்துக்கள்! உனது கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிய வந்தன. உலக அரங்கில் இரண்டு அணியினர். ஓர் அணியினர் மானுட வாழ்க்கையை மறுப்பவர்; துன்பச் சுமையென வெறுத்து ஒதுக்குபவர். பிறிதோர் அணியினர் வாழ்க்கையை ஏற்பவர்; ஏற்று மகிழ்ந்து வாழ்தல் வேண்டும் என்ற கொள்கையினர். நாம் இரண்டாவது அணியினர். நமது கருத்து, மானுட வாழ்க்கை உயர்ந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது, ஆம்!

இனிய செல்வ! வாழ்க்கையை மறுக்கும் அணியினர் பேச்சை அன்புகூர்ந்து கேட்க வேண்டாம்! அந்தவழியில் செல்ல வேண்டாம்! அது நமது வழியன்று. நமது வழி, வாழ்வதே!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்பது நமது குறள். இத்திருக்குறள் காட்டும் வழியே வழி. நில உலகில் வாழ்வதே வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒருகலை; அது நுண்ணிய அருமைப்பாடுகள் உடையது.