பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



253


உழைத்திடுக! முதலில் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்! மகிழ்ச்சியாக இரு! வாழ ஆசைப்படு! அடுத்து எழுதுகிறோம்.

இன்ப அன்பு
அடிகளார்
2. அறிவே ஆன்மாவின் அனுபவம்

இனிய தமிழ்ச் செல்வனுக்கு,

"வள்ளுவர் வழி” வழியாகப் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்! உனக்கு எழுதிப் பல திங்கள்கள் ஆயின “வள்ளுவர்வழி” நாயகர் தே.கண்ணன் அடிக்கடி கேட்பார். கடிதம் யாதொன்றும் வரவில்லையே என்று! நீண்ட இடைவெளிக் காலம் கழிந்து போனதற்காக வருந்துகின்றோம். இனி, கூடுமானவரை தொடர்ந்து எழுதுகின்றோம்.

சென்ற கடிதத்தில் "வாழ்வாங்கு வாழ்க!" என்று எழுதியிருந்தோம். ஆம்! வாழ்தலைப் பொருளும் பயனும் உடையதாக ஆக்க வேண்டும். "பிழைத்தல்" "காலம் கழித்தல்” ஆகியன உயிர்ப்புள்ள வாழ்க்கையன்று. வாழ்க்கை அறிவுச் சேகரிப்பு வழியாலும் சங்கிலித் தொடரனைய செயல்களாலும் நிரப்பப்படுதல் வேண்டும். அறிவறிந்த ஆள்வினை வாழ்க்கையின் கருவி. அறிவு எளிதில் கிடைப்பதா? அறிஞர் ஆகலாம் என்று கற்கின்றோம். ஆனால், கற்போர் எல்லாராலும் அறிஞராக முடிவதில்லை. கீறல் விழுந்த வெறும் இசைத் தட்டுகள் போலப் புலம்பித் தவிக்கின்றனர் சிலர். அறிவு, பட்டறிவின் வழி வருவது.

பட்டறிவுக்கு ஆற்றுப்படுத்துவது கல்வி. உந்துசக்தியாக அமைவது சான்றோர் வாய்கேட்ட சொல். அறிவு துன்பத்தினின்றும் பாதுகாக்கும் கருவி. அறிவு தன்மையைப் படைப்பது. இனிய தமிழ்ச் செல்வ, ஆக்கம் நிறைந்த படைப்பின் வழியின்றித் துன்பம் நீங்காது. துன்பம் இயற்கையுமன்று, செயற்கை. அஃதாவது செயற்கையின்