பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



255


வறட்சித்தன்மையுடையனவாய் ஊட்டமின்றித் தேவாங்கு போல நடமாடுகிறது. இது வளரும் தமிழகத்திற்கு நன்றன்று.

இனிய தமிழ்ச் செல்வ, நல்ல நூல்களைக் கற்க வேண்டும். புதிய உணர்வுடன் கற்க வேண்டும்; அறிவு பெற வேண்டும். அறிவு, ஆற்றல் மிக்க கருவியாக வாழ்க்கையில் செயற்பாடுறுதல் வேண்டும். கற்கின்ற நூல்களின் கருத்தை வாழ்க்கையில் சோதனை செய்தல் வேண்டும். கற்ற நூற்கருத்துக்குச் செயலுருவம் தரவேண்டும். இம்முயற்சியில் பெறுவதே அறிவு. அறிவு ஆன்மாவின் இணையற்ற கருவி, அனுபவம், செல்வம். ஆதலால் இனிய தமிழ்ச் செல்வ, "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பதை நினைந்து அறிவைத் தேட முயல்க! வாழ்வாங்கு வாழ அறிவைப் பெறுதலே முதற்கடமை. முயற்சியைத் தொடங்குக! திருவள்ளுவரைப் பழுதறக் கற்பாயாக! எதிர் வரும் இருபத்தோராம் நூற்றாண்டின் தேவை உணர்வுடன் கற்பாயாக! கற்கும் பாங்கே அறிவைத் துரண்டும் சக்தி! கற்றதைச் செயற்பாட்டுக்குக் கொணர்தலே வாழ்க்கை! வாழ ஆசைப்படுக! வாழ்ந்திடுக! பிற பின்! வாழ்த்துகள்!

இன்ப அன்பு
அடிகளார்
3. அறிவின் அழகு

இனிய தமிழ்ச் செல்வனுக்கு, வாழ்த்துக்கள்!

வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவு இரு வகையினது. ஒன்று ஆனது அறிதல், பிறிதொன்று ஆவது அறிதல். ஆனது அறிவதைப் பட்டறிவு என்பர். அதாவது இந்த நொடிக்கு முன்புவரை நம்முடைய வாழ்க்கையானாலும் சரி சமுதாய அமைப்பானாலும் சரி நடந்தனவற்றை அறிதல். இங்கு அறிதலாவது அவற்றின் நடைமுறைகளையன்று. சென்றகால நிகழ்வுகளின் விளைவுகளை அறிதல் அல்லது எதிர்விளைவுகளை அறிதல்.